புதன், 2 ஜூன், 2010

ஃப்ரீடம் ஃப்ளோடில்லா’ என்ற கப்பல்களின் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதல்.


இஸ்ரேலின் கடுமையான தடையின் காரணமாக பட்டினியால் வாடி வதங்கும் ஃபலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக அத்தியாவசியப் பொருட்களுடன் காஸ்ஸாவை நோக்கி வந்துக் கொண்டிருந்த ‘ஃப்ரீடம் ஃப்ளோடில்லா’ என்ற கப்பல்களின் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது.

உயிர்வாழ்வதற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களுடன் கப்பல்களில் புறப்பட்ட ஐந்நூறுக்கும் மேற்பட்ட பணியாளர்களின் மீதுதான் இஸ்ரேல் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது.அத்தோடு இனிமேலும் தாக்குவோம் என வெறித்தனமாக கொக்கரித்து வருகிறது. தாக்குதலுக்குள்ளானவர்கள் இஸ்ரேலின் எல்லையில் அத்துமீறி நுழைந்த அந்நிய நாட்டு ராணுவ வீரர்களல்லர். இஸ்ரேலால் தகர்க்கப்பட்டது ஆயுதங்களை தாங்கி வந்த எதிரி நாட்டு போர்க்கப்பல்களுமல்ல.

இஸ்ரேல் ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு குடிக்க தண்ணீரும், உண்ண உணவும், நோய்களுக்கு மருந்தும் அளிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக மடியக்காத்திருக்கும் காஸ்ஸாவின் மனித உயிர்களை காப்பாற்றுவதற்காக இஸ்ரேலின் தடைகளை பொருட்படுத்தாமல் அத்தியாவசியப் பொருட்களுடன் சென்றதுதான் அவர்கள் செய்த தவறு.

அமெரிக்கா,பிரிட்டன்,ஹாலந்து,பெல்ஜியம்,க்ரீஸ், போலந்து, இத்தாலி,துருக்கி உள்ளிட்ட நாடுகளின் மனித நேயப்பணியாளர்களும், ஃபலஸ்தீன் வம்சாவழியைச் சார்ந்தவர்களுமடங்கிய சமாதான குழுவில் உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களும், கலைஞர்களும், பத்திரிகையாளர்களும் இடம் பெற்றிருந்தனர்.

பிரபல எழுத்தாளர் ஹென்னிங் மான்கெல், சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற மெய்ரீட் கோரிகன்- மாகூர் ஆகியோர் இந்த காஸ்ஸா நிவாரண குழுவில் அடங்குவர்.
ஆனால் மனித உரிமைகளை மதிக்காத, இனவெறியை மட்டுமே இலட்சியமாகக் கொண்ட சியோனிஷ தேசத்திற்கு இவையெல்லாம் தாக்குதலை தவிர்ப்பதற்கு போதிய காரணங்களல்ல.
இம்முறை இஸ்ரேலின் கொடூரங்களுக்கெதிராக ஐக்கிய நாடுகள் சபையும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலும், ஐரோப்பியன் யூனியனும் ஏன் இஸ்ரேலை தாலாட்டி வளர்த்தும் அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளது சுபச் செய்திகள்தான்.

உலக மரியாதைகளையும், சர்வதேசச் சட்டங்களையும் காற்றி பறத்திவிட்டு இஸ்ரேல் அக்கிரமங்களை கட்டவிழ்த்து விடுவது இது முதல் முறையா என்ற உண்மையை இவர்களெல்லாம் உணரவேண்டும்.சொந்த நாட்டில் அந்நியர்களாக்கப்பட்டு அகதிகளாக வாழ்ந்துவரும் அப்பாவி ஃபலஸ்தீன் மக்களுக்கெதிராக கடந்த அரைநூற்றாண்டாய் தொடரும் இஸ்ரேலின் வரம்பற்ற அக்கிரமங்களின் சமீபத்திய எடுத்துக்காட்டுத்தான் ஃப்ரீடம் ஃப்ளோட்டில்லா கப்பல் மீது நடத்திய தாக்குதல்.

மேற்கத்திய நாடுகளின் உள்ளார்ந்த ஆதரவும், ஐக்கிய நாடுகளின் நிரந்தர மெளனமும்தான் இஸ்ரேல் இத்தகைய கொடூரங்களை தொடர்வதற்கு துணிச்சலைக் கொடுத்தவையாகும்.
ஆகவே நிவாரண கப்பல்களும், சமாதான பணியாளர்களும் தாக்கப்பட்டதற்கு இவர்களும் முக்கிய காரணகர்த்தாக்களாவர். இஸ்ரேலின் கொடூரத்தை நமது நாடும் கண்டித்தது வரவேற்கத்தக்கதுதான்.

ஆனால் ஃபலஸ்தீன் மக்களுக்கு என்றும் நட்பு நாடாக இருந்து வந்த இந்தியா சியோனிஷ்டுகளுக்கு சற்றும் சளைக்காத பாசிஸ்டுகளின் ஆட்சியின் பொழுது இஸ்ரேலுடனான நட்புறவைத் துவக்கியது. அந்நட்புறவை முறை தவறாமல் பேணிவருகிறார்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியாளர்கள்.

ஆகவே இஸ்ரேலின் கொடூரத்தை கண்டிப்பது உண்மையிலேயே ஆத்மார்த்தரீதியாக வேண்டுமென்றால் அந்நாட்டுடன் செய்துக்கொண்ட அனைத்து உடன்படிக்கைகளையும், ராணுவ ஒத்துழைப்பையும் ரத்துச் செய்யவேண்டும். இல்லையென்றால் இரத்த வெறிப்பிடித்த ஒரு தேசத்துடன் நட்புறவைக் கொண்டதற்காக எதிர்காலத்தில் இந்தியா மிகவும் வருந்தவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக