வியாழன், 20 ஜனவரி, 2011

சபரிமலை அய்யப்பன் ரக‌சியங்கள்!!!


ஆண்கடவுள் சிவனுக்கும் ஆண்கடவுள் பெருமாளுக்கும் பிறந்த சபரிமலை அய்யப்பன்.
ஆண்கடவுள் பெருமாள் எடுத்த‌ மோகினி ரூபத்தினால் ஏற்பட்ட பரமசிவனின் அடங்கா காமத்தின் விளைவுதான் சப‌ரிமலை ஐயப்பனாம். ஆக இரு ஆண் கடவுள்களின் புணர்ச்சியால் பிறந்தவர் ஐயப்பன்.தன் வரமே தன்னை அழிக்க வருவதை நினைத்துப் பயந்து திருமாலிடம் ஒடின பரமசிவன் சப‌ரிமலைப்பகுதியின் அய்யனார்... பிராமணர்களால் மணிகண்டானாகவும், அய்யப்பனாகவும் மாறினார்

இதுதான் அந்த கதை: யப்பப்பா என்ன வேகம்... கொள்ளு தின்ற குதிரைகளா? குதிரையைத் தின்ற குதிரைகளா? இவ்வளவு வேகமாக, முரட்டுத்தனமாக, ஆஹா... சூறைக்காற்று வேகத்தில் சுழற்றியடிக்கின்றார்களே? யார் இவர்கள்...? அந்த மலைக் கிராமத்து மக்கள் பதறினார்கள். குதிரையில் உட்கார்ந்து கொண்டு லகானை ஒரு கையிலும், சாட்டையை இன்னொரு கையிலும் கொண்டிருந்த அந்த சிப்பாய்க் கொள்ளையர்கள் சாட்டையால் நர்த்தனம் ஆடினார்கள். ஸ்த்ரிகள் சிதறினார்கள். சின்னச் சின்ன குழந்தைகள் தெறித்தார்கள். ஆண்களில் சிலர் எதிர்த்து நின்றார்கள். ஆனால்... சாட்டைகளின் சமர் தாங்க முடியாமல் அப்படியே உதிர்ந்து போனார்கள். யார் அவர்கள்? அந்தக் கிராமம் எங்கிருக்கிறது? ஏன் அடிக்கிறார்கள்?

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இன்றைய மலையாள தேசத்தில் இருக்கும் மலைக்கிராமம் தான் அது. வந்தவர்கள்... அங்கே கொள்ளையடிக்க வந்த மிலேச்ச சிப்பாய்கள். ஒரு காலத்தில் பாண்டிய ராஜாவிடமிருந்த அந்த மலைதேசம்... அப்போதும் அதற்குப் பின்னரும் வளங்கொழித்துக் கிடந்தது. சுற்றிலும் கொள்ளையடித்துக் களித்த அந்தச் சிப்பாய்கள் சற்றே நிமிர்ந்தனர். சுற்றிலும் 5 குன்றுகள் அழகழகாய் இருந்தன. இயற்கை சௌந்தர்யமாக காட்சியளித்தாள்.

மேலே ஏதாவது வைத்திருப்பார்களோ? சிப்பாய்களில் ஒருவன் கேட்டான். ‘ம்... இருக்கலாம்’ கஷ்டப்பட்டு மேலே ஏறினார்கள்.அங்கே... அவர்கள் கண்ட காட்சி பற்றி தான் இருவேறு கருத்துகள் எதிரொலிக்கின்றன. காந்தமலை என்ற அந்த குன்றை அடைந்த அந்த சிப்பாய்களின் கண்கள் கூசின. சற்றே நெருங்க நெருங்க அவர்களின் இந்த்ரியங்கள் எல்லாம் பிரகாசம்.

அப்படியென்ன அங்கே இருந்தது? தங்கச்சிலை தகதகவென மின்னிய தங்கச் சிலை மலைவாழ் மக்களின் செழிப்பை உணர்த்தியது அந்தச் சிலை. அடித்தார்கள் கொள்ளை. இது செவி வழிச்செய்தி. இன்னொன்று அச்சிலையை உடைத்து நொறுக்கிவிட்டார்கள் என்ற செய்தி. இதற்குப் பிறகு, தாங்கள் வழிபட்ட சிலை களவாடப்பட்டதைக் கண்ட மலைமக்கள் இங்கிருந்து காந்த மலையிலிருந்து சற்றே இறங்கி வந்தனர். 5 குன்றுகளுக்கும் நடுப்பட்ட அந்த ஸ்தலத்தில் இன்னொரு சிலையை உருவாக்கினார்கள்.

இயற்கையை வழிபட்டு பின் விலங்கு உருவங்களை வழிபட்ட பின் மனித உருவுக்கு மாறிய மக்களின் கிராமத்து தெய்வமாக விளங்கியது அய்யனார். பெண் காவல் தெய்வம் போல் இது ஆண் காவல் தெய்வம். இதேபோலத்தான் அந்த மலைமக்கள் தங்கள் காவல் தெய்வமாக அய்யனாரை அமர வைத்து வழிபட்டுக் கொண்டிருந்தனர். இந்தச் சிலையும் சிலநூறு ஆண்டுகளுக்கு முன்பு மிலேச்ச சிப்பாய்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

முதலில் பொன் விக்ரகம் இருந்த இடம்தான் பொன்னம்பலம் என அழைக்கப்படுகிறது. பொன்... தங்கம். அம்பலம்-என்றால் கோயில் என்ற அர்த்தத்துடன். அந்த சிலை கொள்ளைபோன பிற்பாடு...வேறொரு சிலையை மலைக்கு நடுவே பாதுகாப்பாய் வைக்கலாம் என்றால்... அதுவும் கொள்ளையடிக்கப்பட்டது. இங்கே இன்னொரு தகவல்...
இரண்டாவதாக நடந்த சம்பவத்தில் சிலை கொள்ளையடிக்கப்படவில்லை. உடைத்து நொறுக்கப்பட்டது என்றும் தகவல்கள்.

இப்படியாக எதிரிகளால் உடைத்து நொறுக்கப்பட்ட அல்லது கொள்ளையடிக்கப்பட்ட அந்த மலைமக்களின் சிலைதான் இன்று ஜோராக ஜொலித்துக் கொண்டிருக்கிறது. தினம் தினம்பூக்களால் பூஜை செய்து... திருவிழாக்களுடன் கொண்டாடப்பட்ட அந்த மலைமக்களின் சிலையை மையமாக வைத்து... இன்று சிலர் வருஷத்துக்கு சில நாட்கள் மட்டுமே அந்தச் சிலையை திறந்து தங்கள் வசம் வழிபாட்டு லகானை வைத்திருக்கிறார்கள். இப்போது அந்தச் சிலை...? உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு மிலேச்ச சிப்பாய்களால் துஷ்பிரயோகம் பண்ணப்பட்ட அந்தச் சிலையை மலை மக்களால் மறுபடியும் செதுக்கி உட்கார்த்தி வைக்கப்பட்டது . சுத்தமாக ஓடிவருகின்ற மலை ஜலத்தை (நீரை) எடுத்துக் குளிப்பாட்டி... சில்லென்று அன்று பூத்த மலை மலர்கள் அன்றே பறித்து தங்கள் அய்யனாருக்கு கட்டி... மென்மை வழிபாடு செய்தனர்.

இன்னொரு பக்கம்... கூர்முனை அஸ்திரங்களால் குத்திக் கிழிக்கப்பட்ட வன விலங்குகளின் மாம்ஸத்தைக் கொண்டு வந்து தங்களது அய்யனாரின் காலடியில் சமர்ப்பித்து வன்மை வழிபாடும் செய்தனர்.இப்படி மென்மை வழிபாடு, வன்மை வழிபாடு இரண்டும் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில்தான். அந்த மலைதேசத்துக்கு இப்போது ஆந்திரப்பிரதேசமாக இருக்கிறதே... அந்தப்பக்கத்திலிருந்து ஒரு கூட்டம் பிழைப்புக்காக தனியாய் நடந்து வந்தது. அப்போதுதான் அந்த அய்யனாரையும் மலை மக்களையும் பார்த்தார்கள்.

அது ராத்திரி நேரம். மலைமக்கள் இரு கையில் தீப்பந்தத்தையும் மறுகையில் மாம்ஸத்தையம் வைத்திருந்தனர். அய்யனாருக்கு எதிரே தீப்பந்தத்தை கொளுத்தி வைத்துவிட்டு... வேட்டையாடி வந்த உடல்களை அய்யனாருக்கு படைக்க ஆரம்பித்தனர். இன்றைய ஆந்திரப்பிரதேசத்திலிருந்து வந்தேறிய நம்பூதிரிகள் (பிராமணர்கள்) தங்கள் பூணூலை முறுக்கிக்கொண்டு இக்காட்சியைப் பார்த்தனர். தீவிர வைதீகர்களான நம்பூதிரிகள்... இந்த அய்யனார் வழிபாட்டை கொஞ்சநாள் கவனித்தபடியே இருந்தவர்கள்... திடீரென ஒருநாள்... புது ஐதீகத்தை கிளப்பினார்கள். யப்பப்பா... இது என்ன அபச்சாரம்?

நெய்யும் தேங்காயும் படைக்கப்பட வேண்டிய இவனுக்கு கொழுப்பு வடியும் மாம்ஸத்தை படைக்கிறீர்களே...? இவன் யார் தெரியுமா உங்களுக்கு? மலைமக்கள் சிலிர்த்துப் போனார்கள். ஆஜானுபாகுவான நம்பூதிரிகளை பார்த்ததுமே இவர்கள் மேல் மலைமக்களுக்கு ஒரு புது மரியாதை பிறந்தது.என்ன சாமி சொல்றீங்க? இது உங்க அய்யனார் இல்லப்பா... எங்க அய்யப்பன். இவன் இங்க வந்த கதை உங்களுக்குத் தெரியாதா?

" தெரியுமே! ரெண்டு மூணு தடவ உடைச்சிட்டாங்க. அப்புறம் நாங்களே கஷ்டப்பட்டு இந்தச்சிலையை செஞ்சோம். காவலுக்கு வச்சிருக்கோம்'' -இதுதான் மலைமக்களின் பதில். நம்பூதிரிகளாக வந்த பிராமணர்கள் பதில் சொன்னார்கள். "தப்பு...தப்பு... இவன் எப்படி அங்கே வந்தான்னு பெரிய ஏதீகமே இருக்கு...' என்றபடி ஆரம்பித்தார்கள்.சிவபெருமான் இருக்கிறாரே... தன்னை நினைத்து யார் தவம் செய்தாலும் அதில் மெச்சி மயங்கி அவர்களுக்கு வரம் கொடுத்துவிடுவார்.

அப்படித்தான் பத்மாசுரன் என்ற ஒர் அசுரன் சிவனை நினைத்து கடுந்தவம் இயற்றினான். வெயில், மழை, பரி, பாம்பு, புலி எதற்கும் பயப்படாமல் அசையாமல் சிவனது நாமத்தையே அசை போட்டான்.வந்தார் சிவன். என்னப்பா வரம் வேண்டும்? "தேவா... நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் பஸ்பமாய் எரிந்து இறந்துவிடவேண்டும்...'- கேட்ட வரத்தைப் பற்றி யோசிக்காமல் "தந்தேன் பத்மாசுரா' என சேங்ஷன் பண்ணிவிட்டார் சிவன்.

அன்றிலிருந்து அசுரனுக்கு கை அரித்தது. தன் எதிரிகள், மானிடர்கள் என பிடிக்காதவர்கள் தலை மேலே கை வைத்தான். உடனே அவர்கள் பஸ்பமாகி கருகிக் கிடந்தார்கள். பத்மாசுரனுக்கு விபரீத எண்ணம் உதித்தது. எல்லார் தலையிலும் கை வைத்தாகிவிட்டது. வரம் கொடுத்த சிவன்தான் பாக்கி...அவரிடம் போனான். "என்னப்பா?' என்றார் சிவன்.
"உங்கள் வரத்தின் வலிமையை சோதிக்க வேண்டும் போல இருக்கிறது. அதனால் உங்கள் தலையில் ஒரே ஒரு தடவை கை வைத்து...' சிவனுக்கு புரிந்துவிட்டது. தன் வரமே தன்னை அழிக்க வருவதை நினைத்துப் பயந்து திருமாலிடம் ஒடினார்.

புரிந்துகொண்டார் பெருமாள். இந்த அசுரனை திசை திருப்ப வேண்டுமென்றால் "தசை' யால் தான் முடியும் என்று நினைத்த பெருமாள்... அடுத்த கணமே மோகினியானார். மோகினி...? ஆமாம்... மோகம் முற்றிய நிலையில் சுவைக்க அழைக்கும் கனிகள் போன்ற அழகுடையவள் தான் மோகினி. வாலிப்பான தேகம், வளமையான பாகம், சின்ன இடுப்பு, வண்ண ஆபரணம், கண்டவரை கதிகலங்கச் செய்து காமுற வைக்கும் அழகுப் பதுமையாய் மோகினி நின்றாள்.

பார்த்தான் பத்மாசுரன். பாதத்திலிருந்து கேசம் வரை பாகம் பாகமாய் மோகினியைப் பார்த்தவன் தன்னை மறந்தான். தன்னையே மறந்துவிட்டபோது... சிவன், தசை, வரம் எல்லாம் அவனுக்கு எப்படி ஞாபகம் வரும்? மோகினிக்குள் மூழ்கிய பத்மாசுரனின் ஞாபகத்திலிருந்து எல்லாம் மறந்து போயின. பார்த்தார் பெருமாள். அதாவது மோகினி, பத்மாசுரனை இன்னும் கவனம் சிதறச் செய்வதற்காக தொடங்கினாள் நாட்டியத்தை.

அடடா... மோகினி சும்மா நின்றாலே சொக்கும் அழகு. இதில் அவள் ஆட அரம்பித்தால்...? கேட்க வேண்டுமா? "பத்மாசுரா என்னைப் போல் நீயும் அடினால் என்னை அடையலாம்? தயாரா?' மோகினியின் வார்த்தைகள் பத்மாசுரனை சொர்க்கத்தில் கொண்டு வந்து போட்ட மாதிரி குஷிப்படுத்தின. தான் ஆடிய ஆட்டத்தையெல்லாம் மறந்து மோகினிக்கு எதிராக நின்று ஆடத்தொடங்கினான். மோகினி இடுப்பை வளைத்தாள். அசுரனும் தன் இடுப்பை வளைத்தான். மோகினி தன் வளைக்கரங்களால் அபிநயம் பிடித்தாள். விடவில்லை அசுரனும் அதே அசைவைச் செய்தான். குனிந்து நிமிர்ந்து சிரித்தாள் மோகினி.

தன் காலைத்தூக்கி பட்டுப் பாதங்களைக் காட்டினாள். பத்மாசுரனும் முயன்றான். சுற்றினாள். பின்னல் காற்றில் பறந்தது. மறுபடியும் மோகினி தன் இடுப்பில் கை வைத்தாள். நெஞ்சில் கை வைத்தாள். பின் முகத்தைக் கைகளால் பொத்தி புன்னகைத்தாள். அசுரனும் ஆனந்தத்தில் அப்படியே செய்தான். கடைசியில்... முகத்தில் வைத்திருந்த கையை தலையில் வைத்தாள் மோகினி.எந்தத் தாமதமும் இல்லாமல் பத்மாசுரனும் தன் கைகளை தன் தலையில் எடுத்து வைத்தான்...? மோகினியாக வந்த பெருமாளின் சவுந்தர்ய ரூபத்தால் எல்லாவற்றையும் மறந்துபோன பத்மாசரன்... மோகினி போலவே தானும் தன் தலைமேல் கை வைத்தான். அவ்வளவுதான்! அவன் வாங்கிய வரம் அவனுக்கே ஆபத்தாக முடிந்தது. நான் யார் தலையில் கைவைத்தாலும் அவர்கள் எரிந்து இறந்துவிட வேண்டும் என அவன் வாங்கிய வரத்தின்படி தன்னைத் தானே எரித்துக் கொண்டான். இதையடுத்து சிவபெருமான் நிம்மதியடைந்தார்.

மோகினி தன் அவதாரம் எடுத்தற்கான காரியம் நிறைவேறி விட்டதை கண்டு முகம் மலர்ச்சியடைந்தாள். இனிமேல் இந்த பத்மாசுரன் தொல்லை இல்லை. ஆமாம் அசுரனை சம்ஹாரம் செய்துவிட்டு மோகினியாகவே இருந்த பெருமாளின் அழகு சிவனுக்குள் பிரேமத் தீயை மூட்டியது. மோகினியை மெல்ல நெருங்கினார். ‘அந்த அசுரனை சம்ஹாரம் செய்து விட்டீர்கள். ஆனால் எனக்குள் பிரேமம் (காமம்) எனும் இன்னொரு அசுரன் முளைத்தெழுந்து விஸ்வரூபம் செய்கிறான். அவனை சம்ஹாரம் செய்யவும் உங்கள் தாட்சண்யம் தேவை’ சிவனும் மோகினியும் மோகித்தார்கள், பிரேமித்தார்கள்.

இந்த சம்பவத்தால் மோகினி ஒரு தெய்வக் குழந்தை பெற்றெடுக்க அதுதான் அந்தக் குழந்தைதான் அந்த தெய்வக் குழந்தை தான் அய்யப்பன். சிவனுக்கும் மோகினிக்கும் (பெருமாளுக்கும்) பிறந்தவன் பிறக்கும் போதே கழுத்தில் மணியுடன் பிறந்ததால்... அவனுக்கு மணிகண்டன் என்றும் பெயர் உண்டு என அய்யப்பன் பிறந்த கதையை நம்பூதிரிகள் மலைவாசிகளிடம் சொல்ல மலைமக்கள் திகைத்து விட்டார்கள்.

இங்கே சுருக்கமாக நாம் பார்த்ததே இவ்வளவு சுவராஸ்யமாக இருக்கிறதென்றால் அன்று மலை வாசிகளிடம் கதை கதையாய் சொல்லப்பட்ட போது அவர்கள் எவ்வளவு ஆர்வமாய் கேட்டிருப்பார்கள்.அப்படியா? எங்கள் அய்யனார் இப்படியா பிறந்தார்? என்றார்கள் ஆமாம் அவர் இன்னும் பல அரிய செயல்கள் செய்திருக்கிறார். இரண்டு மூர்த்திகளால் அவதரித்தவரான அய்யப்பனை இதுபோல நீங்கள் வழிபடக் கூடாது அய்யப்பனை வழிபடும் வேலையை எங்களிடம் விட்டு விடுங்கள். நம்பூதிரிகள் சொன்ன புராணக் கதைகளை மெல்ல மெல்ல நம்ப ஆரம்பித்தார்கள் மலைமக்கள் மலைப் பகுதியில் இருந்த தங்கள் அய்யனாரை அருகே சென்று பூக்கள் போட சில படிகளைக் கட்டி வைத்திருந்தார்கள் மலைவாசிகள்.

இதைப் பார்த்த நம்பூதிரிகள் ‘ஆஹா இந்த படிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?’ எனக் கேட்க ‘ஏன் தெரியாது... ஏறி வழிபாடு செய்ய வசதியாக இருக்கட்டுமே என நாங்கள் தான் செதுக்கி வைத்தோம்’ என்றார்கள் மலைமக்கள். அபச்சாரம்... அபச்சாரம்... இவை சாதாரண படிகள் அல்ல... ஒவ்வொரு படியும் ஒவ்வொரு தெய்வ அம்சம் கொண்டவை. 6 திருப்படிகள் சிவாம்சம் வாய்ந்தவை. 7 திருப்படிகள் பெருமாள் அம்சம் கொண்டவை. 5 திருப்படிகள் மணிகண்டனான அய்யப்பன் அம்சங்கள். இந்த 18 படிகளில்... நீங்கள் இனிமேல் சாதாரணமாக ஏறமுடியாது. விரதம் இருந்து... சும்மா இல்லை.

1 மண்டலம் விரதம் இருந்து... மாம்ஸம் விலக்கி... சுத்தமாக... இருந்தால்தான் இங்கே ஏறமுடியும். என்ன புரிகிறதா?... ...அவர்களின் தொனி உயரத்தில் இருந்தது. இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாய்... நாளடைவில் அந்த மலைப்பகுதியின் அய்யனார்... நம்பூதிரிகளால் மணிகண்டானாகவும், அய்யப்பனாகவும் மாறினார். மலைமக்கள் படிகளின் கீழே நின்றனர். பிராமணர்கள் மேலே சென்றனர். மேலே சென்றவர்களின் கண்களில்... ‘திரு திரு’வென ஒரு ஜோதிப் பிரகாசம் ஜொலித்தது. என்ன அது?... ஆச்சர்யமாய் கேட்டனர்.

மலைமக்களோ அதைப் பார்த்துச் சிரித்தனர். “நாங்கள் ஆச்சர்யப்படுகிறோம். பயப்படுகிறோம். பெரிதாக எரிகிறதே என்று, நீங்கள் எவ்வித முகபாவமும் காட்டாமல் இருக்கிறீர்களே?...” மறுபடியும் கேட்டார்கள் பிராமண நம்பூதிரிகள். ஓ. அதுவா?... நீங்கள் எங்களை பார்த்த ராத்திரி நேரம்... நாங்கள் தீப்பந்தம் கொளுத்தி வைத்திருந்தோமே... கவனித்தீர்களா...?‘ஆமாம்..‘இன்று எங்கள் திருவிழா. நாங்கள் தீப்பந்தத்தை கொளுத்தி திருவிழா கொண்டாடுகிறோம். அதுதான் அந்த காந்த மலைமேல் ஜொலிக்கிறது’ என்றார்கள் மலைவாசிகள். கொஞ்சநாள் ஆனது... மலைமக்களின் தீப்பந்தத் திருவிழாவை தங்களது திருவிழாவாக பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தனர்.

அட அசடுகளே... அது உங்களின் திருவிழா அல்ல... அய்யப்பனுக்கு சபரி என்னும் காட்டுவாசி பக்தை இருந்தாள். அவளுக்கு மோட்சம் தந்தார் அய்யப்பன்... புஷ்ப மரங்கள் பூக்களை இறைக்க... தேவர்கள் எல்லாம் வந்திருந்து வாழ்த்த... ஒரு ஜோதி பெரிய அளவில் தோன்றியது. அதிலே சபரி கலந்து மோட்சம் அடைந்தாள். அந்த மோட்ச ஜோதி அது. நீங்கள் அதன் பிறகு திருவிழாவை ஆரம்பித்திருக்கிறீர்கள். புரிகிறதா?.. இந்த மலைப் பகுதிக்குக் கூட சபரிமலை என்று பெயர். இப்படித்தான் பெயர் வந்தது இப்போது தெரிந்துகொண்டீர்களா?. பிராமணர்கள் தீப்பந்தத் திருவிழாவுக்கு புது ‘வெளிச்சத்தை’ கொடுத்தார்கள். தை மாதம் மகர நட்சத்திரத்தில்... இன்றும் அந்த காந்த மலைமேலே ஒரு ஜோதி தெரிகிறது. திடுதிப்பென மறைகிறது. இப்போதும் மலைமக்கள் தீப்பந்த திருவிழா கொண்டாடுகிறார்களா?... இல்லையே?... பிறகெப்படி? நம்பூதிரிகள் ரகஸ்ய ஏற்பாடு அங்கே தீமூட்டி வருவார்கள். இதுபற்றி பிரபல்யமான கேரளத் தலைவர்கள் பலருமே சொல்லியிருக்கிறார்கள். மகரஜோதி என்பது மலைமக்கள் ஜோதி. அதை இப்போது நம்பூதிரிகள் தான் ஏற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

திருப்பதியில் உள்ளது காளி சிலையா? திருப்பதியில் நடப்பதென்ன? ஆண் ஆகிய‌ திருப்பதி பெருமாளுக்கு தலையை சீவி சிங்காரித்து அழகான பின்னல் ஏன்? பிராமணர்களால் காளியை சிவனாக்கி பின் திருப்பதி பெருமாளாக எவ்வெவ்வாறு மாற்றப்பட்டது? திருப்பதியில் உங்களை மொட்டை போடச்செய்து பிராமணர்களால் "மொட்டை" அடிக்கப்படுபவர்களே!. சிந்தியுங்கள்.

நன்றி: ஹிந்து மத அறிஞ்சர் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

1 கருத்து: