சனி, 22 மே, 2010

ப. சிதம்பரத்தின் “காவி” உறவு பற்றிய ஒரு ஆய்வு.


ப.சிதம்பரம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தோழமை என்பது பன்னாட்டு நிறுவனங்களின் நலனை பாதுகாக்கவென்றே தோன்றுகிறது. ப.சிதம்பரத்தின் முந்தைய கால நடவடிக்கைகைள கவனித்து வருபவர்களுக்கு நாடாளுமன்ற மேலவையில் ஏப்ரல் 15ம் நாளைய விவாதத்தின் போது பா.ஜ.க.வின் பொதுச்செயலாளர் அருண் ஜேட்லி உள்து றை அமைச்சர் ப.சிதம்பரத்தின் நடவடிக்கைகளை ஆதரித்து பேசியதை பார்த்தால், வியப்பாக எதுவும் தோன்றாது. தண்டேவாடாவில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய கொரில்லா தாக்குதல் குறித்த விவாதத்தின் போது சிதம்பரம் மற்றும் பா.ஜ.க. பெரும்புள்ளிகளுக்குமிடையே உள்ள ஆர்வம் என்பது லண்டனின் வேதாந்தா வள நிறுவனத்தின் பணப்பலன் பெருக்கும் நடவடிக்கைகளின் மீது உள்ளார்ந்த ஈடுபாட்டினைச் சார்ந்தே உள்ளது.

ஜனநாயக முற்போக்கு அரசின் முதல் நிதி அமைச்சராவதற்கு முன் தினம் வரை சிதம்பரம் மேற்படி வேதாந்தா பன்னாட்டு நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குனர்களில் ஒருவர் என்பதுடன் அத்தகைய கூட்டு முறையிலான நிறுவனங்களுக்கு வழக்கறிஞருமாவார். தேசிய முற்போக்கு கூட்டணி அரசின் தலைமையில் இயங்கும் போது பா.ஜ.க.தலைமை பால்கோ, ஸ்டெரிலைட் பொதுத்துறை நிறுவனங்களின் ரூ.551/50 கோடி அளவிலான பங்குகளை வேதாந்தா கப்பல் நிறுவனத்திற்கு விற்க முனைந்ததையும், அதே சமயம் பாரத ஸ்டேட் வங்கி முதலீட்டு சந்தை 49 சதவீதத்திற்கான 842.52 கோடி தொகைகளை மட்டும் கையாள அனுமதிக்கப்பட்டிருந்தது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். உலகத்தின் முதல் பொதுத்துறை பங்கு விற்பனைக்காக அமைச்சராக்கப்பட்ட பா.ஜ.க.வின் முக்கியஸ்தர் அருண்ஷோரிக்கும் இதில் பங்கு உண்டு.

ஆனால் சிதம்பரத்திற்கும், சங் பரிவார் என்றழைக்கப்படும் மதவாதிகளுக்கும் இடையே உள்ள கொள்கை ரீதியான ஒன்றுபடுதலின் வேரை பார்க்க வேண்டுமெனில் மிகுந்த ஆழத்தில் நோக்க வேண்டும். அமெரிக்காவின் மாஸ்சூசெட்ஸ்-ல் உள்ள ஹார்வர்டு பிஸினஸ் பள்ளியின் இரண்டாவது ஹரிஷ் சி.மகிந்த்ரா நினைவு சொற்பொழிவில் முன்னாளைய நிதி அமைச்சர் சில குறிப்பிடத்தகுந்த, கூர்ந்து கவனித்தால் எச்சரிக்கை கொள்ளத்தக்க கருத்துக்களை வெளியிட்டார்.

நேரு காலத்தை வெளிப்படையாக தாக்கிய பின் இவ்வாறு கூறுகிறார் “இந்திய சுதந்திரத்திற்கு பிறகு 3 பத்தாண்டுகளாக பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசு சார் பொருளாதார மாதிரி பின்பற்றப்படுகிறது” அரசே பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் நிலையில் உலக பொருளாதார சூழலில் இருந்து விலகியே இருந்தது. அந்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி சதவீதம் சராசரியாக 3.5 சதவீதமாகத்தான் இருந்தது. நான் அந்த வருடங்களை “இழப்பு” பத்தாண்டுகள் என்றே சொல்வேன் என்றார்.

சங்பரிவார் கொள்கை நோக்கமாக பொதுத்துறை கூடாது என்பதை பிரதிபலிக்கும் விதமாகவே இருந்தது. சிதம்பரம் உலக வங்கி மற்றும் சர்வதேச கண்காணிப்பு நிதியகத்தின் நடவடிக்கைகளை உணர்ச்சியுடன் ஆதரி்க்கும் நபர் என்பதால் 1956ம் ஆண்டின் இரண்டாவது தொழிற் கொள்கை தீர்மானத்தையும், இரண்டாவது ஐந்தாண்டு (1956-61) திட்டத்தையும் கிள்ளியெறியும் மறைமுக திட்டம் வைத்திருந்தார்.

ஆனால் சிதம்பரம் மட்டுமல்ல, பிரதமர் மன்மோகன்சிங் கூட 1938ம் ஆண்டு நேரு தலைமையேற்ற திட்டக்குழுவின் தீர்மானத்திற்கு பதிலாக, 1944ம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான காங்கிரஸ் நிறைவேற்றிய பொருளாதார தீர்மானத்தையே முன்வைக்கிறார். 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜே.ஆர்.டி.டாடாவின் பிறந்தநாள் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் துவக்கவுரையில் கூட பிரதமர் ஜேஆர்டி முக்கிய பங்களிப்பு உள்ள பாம்பே திட்டத்தின் மீதான தனது கவர்ச்சியை வெளிப்படுத்தினார்.

காங்கிரஸின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், சிதம்பரத்தின் “மாவோயிஸ்ட் பிரச்சனையை பழங்குடி மக்களைப் பற்றி கருத்தில் கொள்ளாது வெறும் சட்டம், ஒழுங்குசார் பிரச்சினையாக அணுகியவிதம்” தவறென ஒரு செய்தி ஊடகம் மூலம் கடுமையாக சாடிய போது, அருண்ஜேட்லி சினத்துடன் மறுமொழியாக “நக்சலிசத்தை ஒழித்துக்கட்ட நமக்கு வலுவான தலைமை, உறுதியான நெஞ்சம் மற்றும் நிலைநிறுத்தும் அதிகாரம் தேவை என்பதோடு நாங்கள் மாண்புமிகு உள்துறை அமைச்சரின் நடவடிக்கையை முற்றாக ஆதரிக்கிறோம்” என்கிறார்.

அவர் தன் வாதத்தை இவ்வாறு முன்வைக்கிறார், “தனது உள்துறை அமைச்சரை கீழேதள்ளி வீழ்த்த முனையும் அரசை நாம் விரும்பவில்லை, அரசு பிளவுபடுவதையும் நாம் விரும்பவில்லை, மாவோயிஸத்திற்கு எதிரான போர் தளர்த்தப்படவேண்டுமென இந்த மாண்புமிகு அவையின் பாதியை நிரப்பிக் கொண்டிருக்கும் உறுப்பினர்களின் கருத்துக்களையும் நாம் விரும்பவில்லை”

இருப்பினும் சிதம்பரம் சங் பரிவாரால் நகர்த்தப்படும் சிறிய காய் அல்ல. அவருடைய உள்ளார்ந்த ஈடுபாடு என்பது வேதாந்தா மற்றும் அது போன்ற பெரிய சுரங்க தொழிலின் மீதுதான். அவர் முக்கியத்துவமாக தெரிவிப்பது “இந்தியாவின் கனிம வளங்கள் என்பது நிலக்கரி – உலகின் நான்காவது இருப்பு உள்ள தேசம், இரும்புதாது, மாங்கனீசு, மைக்கா, பாக்சைட், டைட்டானியம் தாது, குரோமைட், வைரம், இயற்கை வாயு, எண்ணைவளம் மற்றும் அரிய கற்கள். பொதுக் கருத்து நமக்கு சொல்வதெல்லாம் இவற்றையெல்லாம் திறனுடன் விரைவாகவும், தோண்டி எடுக்க வேண்டுமேன்பதே”

இப்பொழுது காங்கிரஸ் அல்லது அதன் தலைவர் சோனியா காந்தி சிதம்பரம் பற்றி திக் விஜய் சிங் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் உள்துறை அமைச்சரைப் பற்றி கணிப்பாய்வு மேற்கொள்ள வேண்டும். சிதம்பரத்தின் முன் வரலாறுகள் சோனியாவிற்கு தெரியும். தற்செயலாக ஆர்.பொத்தாக் என்பவர் எழுதிய “வேதாந்தாவின் கோடிகள்” புலனாய்வு பதிவில் ஸ்டெ ரிலைட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1000 சதமாக உயர்த்தி மதிப்பிட்டபோது 2003ம் ஆண்டில் வேதாந்தா நிறுவனத்திடமிருந்து சிதம்பரம் 20000 டாலர்கள் பெற்றார் என குறிப்பிடுகிறார்.

2006ல் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மிகுந்த சூடான விவாதப் பொருளாக இருந்தது. சமாஜ் வாதி, தெலுங்குதேசம், மற்றும் அ.தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் வேதாந்தா நிறுவனத்தால் சந்தையில் விடப்பட்ட நிதியின் நம்பகத்தன்மை குறித்தும், பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கும், அந்த நிறுவனம் நிதியளித்திருப்பது பற்றி காரசார விவாதங்கள் நடைபெற்ற போதிலும் சிதம்பரம் தனது நிலையிலிருந்து எந்தவித பாதிப்பின்றிருந்தார்.

கனிம வளங்கள் தோண்டப்பட்டு அங்கு பூகோள சூழல் தவிர்க்க முடியாத நிலை அடையும் முன், இன்றோ, நாளையோ சோனியா இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். ஆனால் உள்துறை அமைச்சர் புலம் பெயர்ந்து அவதியுறப்போகும் பழங்குடியினரைப்பற்றி சிறிதும் கவலையுறாமல், அவர்கள் நிலத்திலிருந்து கனிம வளங்கள் எடுத்து மிகப்பெரிய உலோக சாம்ராஜ்யம் உருவாக்கத் துடிக்கும் பெரும் நிறுவனங்களைப் பற்றித்தான் அதிக கவலை கொண்டுள்ளார் என்றே தெரிகிறது.

வியாழன், 13 மே, 2010

நொய்டா படுகொலைகள்:சுரேந்தர் கோலிக்கு மரண தண்டனை.


நொய்டாவில் நிதாரி கிராமத்தில் ஏராளமான குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுரேந்தர் கோலிக்கு(38) மரண தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.2006-ம் ஆண்டு நிதாரி கிராமத்தில் 19 குழந்தைகளும் பெண்களும் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். இதில், ஆர்த்தி என்னும் 7 வயது சிறுமியை கோலி கொலை செய்தது நீதிமன்றத்தில் உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து, அவருக்கு மரண தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.கே.சிங் தீர்ப்பளித்தார்.

மொகீந்தர் சிங் பாந்தர் என்பவரின் வீட்டில் சுரேந்தர் கோலி பணியாற்றி வந்தார். இந்த வழக்கில், பாந்தர் தண்டனையின்றி தப்பிவிட்டார் என்று நிதாரி கிராம மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.ஏற்கெனவே, ரிம்பா ஹால்தர் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் மொகீந்தர் சிங் பாந்தர் மற்றும் சுரேந்தர் கோலி ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அலகாபாத் நீதிமன்றம் பாந்தரை விடுவித்து தீர்ப்பளித்தது.நிதாரியில் கொல்லப்பட்டவர்களின் உடல் பாகங்கள் பாந்தரின் வீட்டுக்கு பின்புறம் உள்ள சாக்கடைகளில் கண்டெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.