ஞாயிறு, 21 மார்ச், 2010

எழுத்தாளர் ஜெயமோகனது பயனக்கட்டுரைக்கு ஒரு விளக்கம்.


ஹிந்துத்துவா சிந்தனை கொண்ட எழுத்தாளர் ஜெயமோகனது சுத்தம் குறித்த தத்துவப் பித்தத்தைப் பார்க்கும் போது இந்து முன்னணியின் புகழ் பெற்ற மற்றொரு பித்தம் நினைவுக்கு வருகிறது. “இந்துக்கள் கிறித்தவராகவோ, இசுலாமியராகவோ மதம் மாறினால் பாரதப் பண்பாடும் மாறிவிட்டது, பாரதத்தின் புனிதம் கேட்டுவிட்டது என்று கூச்சல் போடும் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கமும் அதன் துணை அமைப்பான இந்து முன்னணி அமைப்பும் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும் அதிகாலையில் குளித்து வாசல் தெளித்து கோலமிட்டு, முற்றத்தில் இருக்கும் துளசி மாடத்தை சுற்றி வந்து வழிபாடு நடத்தும் இந்த பித்தத்தை சகல இந்துக்களுக்கும் பொருத்திப் பார்த்தால் பெரும்பாலானோர் இந்துக்கள் இல்லை என்றாகிவிடும்.

முதலில் முற்றம், துளசிமாடம் போன்றவையெல்லாம் இருக்க வேண்டுமென்றால் வீடும், வீட்டைச்சுற்றி விசலாமான இடமும் வேண்டும். இதிலேயே முக்கால்வாசி இந்துக்கள் அவுட். அப்புறம் மீனவர் குடிசை முன்பு கருவாடும், கோனார் வீட்டு முன்பு ஆட்டுப்புழுக்கைகளும், கறிக்கடை தேவர் வீட்டு முன்பு உப்புத் துண்டமும், சென்னை சேரி மக்களின் குடிசை முன்பு குழந்தைகளின் கக்காவும், விவசாயி வீட்டு முன்பு சாணமோ, தானியமோ இருக்கும். ஐயர் வீட்டு முன்புதான் துளசி மாடம் இருக்கும். உழைக்கும் இந்துக்களின் வீட்டை அவர்களது உழைப்பின் விளைபொருள் அலங்கரிப்பது இந்து முன்னணிக்கு மட்டுமல்ல ஜெயமோகனுக்கும் அருவருப்பாக இருக்கிறது.

சென்னையின் சேரிப்பகுதிகளில் மிகவும் நெரிசலான இடங்களில் பல இலட்சம் மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு வாழ்கின்றனர். 100, 200 சதுர அடிகளில் குடும்பங்கள் கூண்டில் அடைபட்ட கோழிகள் போல எல்லா வேலைகளையும் முடிக்கின்றனர். வீட்டின் இடத்தை பல விதமான சில்லறைப்பொருட்கள் ஆக்கிரமித்திருக்கும். சமைக்க, துணி துவைக்க, குளிக்க, படுக்க எல்லாம் ஒரே இடம்தான். ஒரு சேரியில் சில ஆயிரம் மக்கள் இப்படி வாழம் போது தெருவெங்கும் குப்பைகளும், கழிவு நீரும், எல்லாம் கலந்துதான் இருக்கும். திருமணப் பந்தல், சாவுக்கான பந்தல், விருந்துக்கான சமையல் எல்லாம் தெருவில்தான். பார்க்க ரணகளமாகத்தான் இருக்கும்.நகரங்களை ஒட்டி வாழும் மீனவர் குடிசைகளும் இப்படித்தான் இருக்கின்றன. விசாலமான கடல் சார்ந்த இடங்கள் இன்று அவர்களது பயன்பாட்டிற்கு இல்லை. இருக்கும் குடிசை கூட தனது பரப்பளவை சுருக்கிக்கொண்டேதான் வருகிறது.

நகரத்து சேரிகளில் இருக்கும் நெரிசல் உருவாக்கும் எல்லா துன்பங்களையும் சகித்துக் கொண்டு அந்த மக்கள் இந்தப் பாழாய்ப் போன நகரின் மேட்டுக்குடி வர்க்கத்தினருக்கு எல்லா சேவைகளையும் செய்கின்றனர். அந்த மக்களின் வாழ்விடத்தைப் பார்த்து குப்பைக் கூளமென்றும் அதற்கு மனப்பயிற்சி இல்லையென்றும் எக்காளமிடும் ஜெயமோகன் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் தனிவீடுகட்டி வாழும் வாழ்க்கையை துறந்து விட்டு சென்னை வியாசர்பாடியில் ஒரு வருடம் வாழ்ந்து பார்க்கட்டும்.

1 கருத்து: