புதன், 25 ஜனவரி, 2012

நாட்டிற்கு அணு உலைகள் தேவை இல்லை!

JAN: 26, த.மு.மு.க., மாநிலத்தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது.

கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் எதிர்ப்பு போராட்டக்குழுவை தூத்துக்குடி மறை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்த சிறுபான்மை தொண்டு நிறுவனங்களுடன் தொடர்புபடுத்தி மத்திய அரசு கொச்சைப்படுத்தும் வகையில் நடந்து வருகிறது.


போராட்டத்திற்கு கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியை அளிக்கின்றன என்பது அபாண்டமாகும். மத்திய அரசு அணு உலையை எதிர்க்கும் மக்களை கருத்து ரீதியாக எதிர்கொள்ளாமல் விஷம பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது சிறுபான்மையினருக்கு எதிராக மத்திய அரசு நடத்தி வரும் ஒரு போராகவே கருதுகிறேன்.

கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது வீண்பழியை சுமத்துவதற்காக அவர்கள் நடத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு பணம் வருவதாக கூறி சிறுபான்மை அமைப்புகளை நசுக்குகின்ற விதமாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. எதிர்ப்பு போராட்டம் என்பது மக்களின் தன்னார்வ அடிப்படையில் தான் நடக்கிறது.

நவம்பர் மாதத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் தொண்டு நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு 32 கேள்விகள் அனுப்பப்பட்டிருந்தன. அதற்கு முறையான பதிலை அளித்த பின்பும் டிசம்பர் 5ம் தேதியில் இருந்து 19ம் தேதி வரை தொண்டு நிறுவனங்களில் மத்திய அரசின் உள்துறை அதிகாரிகளின் சோதனை நடத்தியும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. அதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை.

அணு உலை நம் நாட்டிற்கு தேவையில்லை. அணுவை காட்டிலும் நீரில் இருந்து புனல் மின்சாரம் மிககுறைந்த செலவில் தயாரிக்கலாம். நாட்டில் உள்ள நீரின் அளவில் 20 சதவீதத்தை மட்டுமே அரசாங்கம் பயன்படுத்துகிறது. இதை அதிகரித்தாலே போதும். செலவு குறைவு, சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை. இதை ஏன் அரசாங்கம் செய்ய தயங்குகிறது.

எதிர்ப்பு என்பது கூடன்குளத்தில் மட்டுமல்ல. மகாராஷ்ரா, குஜராத் போன்ற மாநிலங்களிலும் அணு உலைக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. கல்பாக்கம் அணுமின் நிலையத்தை இதற்கு உதாரணமாக எடுத்து கொண்டால் அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது நிரூபணமாகி இருக்கிறது. அப்துல்கலாம் ஏவுகணை விஞ்ஞானி தான். அணு விஞ்ஞானி இல்லை. அவர் இதில் காட்டும் ஈடுபாட்டை இலங்கை தமிழர்கள் செத்து மடிந்த போது காட்டியிருக்க வேண்டும். இவ்வாறு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக