வியாழன், 2 டிசம்பர், 2010

‘விக்கிலீக்ஸ்’ தொடர்ந்து அம்பலபடுத்திவரும் உண்மைகள்.

இராக் போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து, விக்கிலீக்ஸ்’ இணையதள நிறுவனம் தற்போது உலகம் முழுவதிலும் அமெரிக்க நிர்வாகமும், அமெரிக்க தூதரகங்களும் நடத்தி வரும் நாசகர பேச்சுவார்த்தைகள், பேரங்கள், அராஜகங்களை அம்பலப்படுத்தும் விதமாக லட்சக்கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது.இதனால் தனது நண்பர்கள், கூட்டாளிகளுடனான உறவுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று அமெரிக்க நிர்வாகம் கதிகலங்கிப் போயுள்ளது. இதையடுத்து விக்கிலீக்ஸ் நிறுவனத்தை மூடுவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

சுவீடனைச் சேர்ந்த இணைய தள நிறுவனம் விக்கிலீக்ஸ். இந்நிறுவனம், உலக மக்கள் அனை வரும் உண்மைத்தகவல்களை அறிந்து கொள்ள உரிமை உடையவர்கள் என்ற கருத்தோட்டத்தை முன் வைத்து, ரகசிய தகவல்களையெல்லாம் கைப்பற்றி இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா அரங்கேற்றிய அட்டூழியங்கள் குறித்த விவரங்கள் ஏராளமாக இந்நிறுவனத்திடம் சிக்கியுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு, இராக் போர் என்ற பெயரில் அமெரிக்கா நடத்திய கொடிய தாக்குதல்கள், அப்பட்டமான மனித உரிமை மீறல்கள். இதில் அமெரிக்க ராணுவம், சிஐஏ உள்ளிட்ட நாசகர உளவு ஸ்தாபனங்கள் நடத்திய சதி ஆலோசனைகள் என அனைத்தையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

இது அமெரிக்க நிர்வாகத்தை ஆத்திரத்திற்கு உள்ளாக்கிய நிலையில், தற்போது 2 லட்சத்து 51 ஆயி ரத்து 287 ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் அமெரிக்காவிலும், உலக நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரங்ககளிலும் நடத்தப்பட்ட சதித்திட்டங்கள், சிறிய நாடுகளுக்கு எதிரான தாக்குதல் திட்டங்கள் என பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை உள்ளடக்கியவை ஆகும். 1966ம் ஆண்டு முதல் 2010 பிப்ரவரி வரை அமெரிக்காவிலும், பல்வேறு நாடுகளில் உள்ள 274 அமெரிக்க தூதரகங்களிலும் உருவாக்கப்பட்ட ரகசிய ஆவணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆவணங்கள் மூலம் உலகம் முழுவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளியுறவு நடவடிக்கைகள் எந்தளவிற்கு இழிவானவையாக இருக்கின்றன என்பது அம்பலமாகியுள்ளது. இது போன்ற, மிகப்பெரும் அளவிலான ரகசிய ஆவணங்கள் உலக மக்களுக்கு பகிரங்கமாக வெளியிடப்பட்டது, வரலாற்றில் இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதுமான தலைவர்கள், அவர்களின் அந்தரங்க விஷயங்கள், நாடுகள், அவைகளுக்கிடையேயான பிரச்சினைகள் எல்லாவற்றையும் கண்காணித்து, அமெரிக்கா வைத்திருக்கும் கருத்துக்கள் இதனால் வெளிவந்திருக்கின்றன. இவை சர்வதேச அளவில் அமெரிக்காவின் அபிலாஷைகளையும், அட்டூழியங்களையும் காட்டுகின்றன. அவைகளில் சில:
பாலஸ்தீனத்தை தொடர்ந்து தாக்குவோம் என்றும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தீவிரமாக தாக்க திட்டமிட்டிருப்பதாகவும், ஒரு அமெரிக்க நாடாளுமன்ற குழுவிடம் இஸ்ரேலின் அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் எகுத்பராக் கூறியுள்ளார். இது தொடர்பாக எகிப்திடம் ஏற்கெனவே பேசிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபிய மன்னர் ஈரானை தாக்குமாறு தொடர்ந்து அமெரிககாவிடம் வலியுறுத்தி வந்துள்ளார். சவூதி மன்னர் அப்துல்லா, 2008 ஏப் ரல் மாதம் அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகளோடு நடத்திய சந்திப்பின்போது இதை வலியுறுத்தியுள்ளார். இதை பரிசீலிப்பதாக, அமெரிக்கா கூறியது.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீது கர்சாய், மனநிலை பிறழ்ந்தவர் என்றும், அவர் போதை மருந்து கடத்தல் மற்றும் ஊழலில் திளைப்பதாகவும் இது நீடிக்கட்டும் என்றும் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தூதரக அதிகாரிகள் பேசியுள்ளனர். இந் நாட்டின் துணை ஜனாதிபதியும் ஒரு ஊழல் பேர்வழி என்றும் பேசியுள்ளனர். அவர் போதை மருந்து கடத்தல் தடுப்பு தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் 52 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் வாங்கியது தெரியவந்துள்ளது.

இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகங்களிலிருந்து பதிவுசெய்யப்பட்ட 3,038 ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் குறித்த விவரங்கள் அடங்கும். இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பிரச்சனைகளை தீர்க்க அமெரிக்கா முழுமையாக தலையிட்டு வருவது குறித்தும் இந்த ஆவணங்கள் உண்மைகளை வெளிக்கொண்டுவந்துள்ளது. (இந்தியா - பாகிஸ்தான் இடையே தாங்கள் ஒருபோதும் தலையிட விரும்பவில்லை என்று அமெரிக்க தூதர்கள் அடிக்கடி கூறி வருவது கவனிக்கத்தக்கது).

இந்த ஆண்டு துவக்கத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாகவும் துருக்கி ஒரு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. இஸ்தான்புல் நகரில் நடை பெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளில் ஒன்றான இந்தியாவை அழைக்க வேண்டாம் என்று அமெரிக்காவின் ஒப்புதலோடு துருக்கி முடிவு செய்தது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் அரசியல் விவகார துணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் மற்றும் துருக்கியின் வெளி யுறவுத்துறை அரசியல் விவகாரம் மற்றும் மத்திய கிழக்கு விவகாரத் துறை துணை அமைச்சர் ரவுப் என்ஜின் சொய்சால் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, பாகிஸ்தானை கைக்குள் வைத்திருக்க வேண்டுமானால் ஆப்கானிஸ்தான் தொடர்பான இந்த சந்திப்பிற்கு இந்தியா வரக் கூடாது என்று பேசப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை குறைப்பதற்காகவும் இப்படி திட்டமிடப்பட்டது என்பதும் இந்த ஆவணங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.

இவை தவிர வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளில் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்தும், இவற்றை அழிக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருவது குறித்தும், இதற்கு இஸ்ரேல் உள்ளிட்ட தனது கைக்கூலி நாடுகளுடன் அமெரிக்க நிர்வாகம் வாஷிங்டனிலிருந்தும், பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் மூலமாக தொடர்ந்து பேசி வருவது குறித்தும் ஏராளமான ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்கா, உலகின் முன்னே அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக