வெள்ளி, 29 ஜூலை, 2011

பாகிஸ்தான் அழகு தேவதை இந்திய உள்ளங்களை வென்றதா?

JULY 29, ரவிவர்மாவின் அந்தக்கால அல்ட்ரா மாடர்ன் பட்டுடை உடுத்திய காளிதேவி போன்ற ஷேப்பில் இருக்கும் பாரதமாதாவை பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் வீடுகளுக்குச் சென்றால் தவறாமல் தரிசிக்கலாம்.


 கோவில் சிலைகளில் அம்மணத்தை ஆடையாகக் கொண்டு ஆடிய பழங்குடியான காளி, பாரதமாதாவான கதை தனிக்கதை! ஆனால் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாரதமாதாவை, பர்தா போட்டு வந்த ஒரு பாகிஸ்தான் தேவதை வென்றுவிட்டாள்! பாரத் மாதா கி நகி! பாக் அழகி கி ஜெய்!

34 வயதானா ஹீனா ரப்பானி கார் எனும் பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவு அமைச்சர், டெல்லி விமானப்படை தளத்தில் (சரி, இந்திய விமானப்படைத் தளத்தில் பாக் விமானம் இறங்கினால் எல்லா இரகசியங்களையும் செல்போனில் சுட்டுவிடுவார்களே என்று யாரும் ஏன் கேட்கவில்லை) இறங்கி வந்து ஒரு பேஷன் ஷோ மங்கை போல கைப்பையை தூக்கிக் கொண்டு நடந்து வந்தாரா…… அவ்வளவுதான் முழு இந்தியாவும் அதன் மனசாட்சியுமான இந்திய ஊடகங்களும் அவுட்! மூன்றாவது அம்பையர், டி.ஆர்.எஸ் இதிலெல்லாம் சோசோதித்தறிய தேவையில்லாத கிளீன் போல்டு! தேசபக்தியை வீழ்த்திக் காட்டிய அழகு!

தமிழ்ப் பதிவுலகம் நன்கறிந்த ஜொள்ளர்களெல்லாம் சினிமா நடிகைகளை ஜொள்ளுவதையெல்லாம் கிண்டலடித்து வந்த ”ஹை கிளாஸ்” அம்பிகளெல்லாம் ஹீனா ஜன்னி பிடித்து சமூக வலைத்தளங்களை பிராண்டுகிறார்கள். டிவிட்டரில் இரண்டு நாட்களாக ஹீனாதான் பேரரசியாக கோலேச்சுகிறார். கசாப்பை தூக்கில் போடு, அப்சல் குருவை சுட்டுப்போடு என்று டெம்பிளேட் தேசபக்தி முழக்கங்களை காப்பி அடித்துப் போடும் இந்திய டவிட்டர்கள் இன்று ஹீனாவை மாய்ந்து மாய்ந்து உருகுகிறார்கள். “இந்தியா – பாக் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தையில் எந்தப் பிரச்சினையையும் பேசித் தீர்க்க முடியாது, ஏனெனில் ஹீனா என்றொரு அழகான பிரச்சினை இருக்கும் போது வேறு எதைப்பற்றி பேசுவது?” இது ஒரு டிவிட். எனில் மற்ற ஜொள் (டிவிட்டு) களைப் பற்றி விளக்கத் தேவையில்லை.

“பாகிஸ்தான் தனது அழகான முகத்தை இறக்கியிருக்கிறது” – இது டைம்ஸ் ஆப் இந்தியா.

“மாடல் நடிகையைப் போன்ற அமைச்சரால் இந்தியாவே வேர்த்துக் கிடக்கிறது” – இது இந்தி நாளிதழான நவபாரத் டைம்ஸ்.

“அனைவரது விழிகளும் அந்த கவர்ச்சியான பாக் அமைச்சர் மேல், அழகும்-சிந்தனையும் கச்சிதமாக கலந்தவள்தான் அந்தப் பெண் என்பது மட்டும் நிச்சயம்” இது ரீடிப் இணையத்தளம்.

“காலநிலைக்கு பொருத்தமான நீலநிற உடையில் அந்த 34 வயது அமைச்சர் டெல்லி விமான நிலையத்தை அடைந்தபோதே, ஆடை அலங்காரப் பிரிவில் முழு மதிப்பெண்களையும் பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்” – இது மெயில் டுடே.

புதன்கிழமை காலையில் டெல்லியில் பெய்த மழையைப் போன்று ஹீனாவுக்கான கவரேஜூம் இருந்தது என்று கூறுகிறார், பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சீமா கோஸ்வாமி.

“ரசிக்கத்தக்க உபகரணங்கள், ரோபெர்ட்டோ கவாலி சன்கிளாஸ், பெரிய எர்மெஸ் பிர்கின் பை, பாரம்பரிய முத்து மாலை – எல்லாம் சேர்ந்து அவளது கவர்ச்சிக்கு மெருகூட்டுகிறது” – இது ஒரு பத்திரிகை செய்தி. என்னதான் கசாபின் மண்ணிலிருந்து வந்தவரென்றாலும் இந்த அழகு தேவதையை ஆராதிக்கவில்லை என்றால் யூத் உலகோடு இடைவெளி வந்துவிடும் என்பதாலோ என்னமோ பா.ஜ.க தலைவர் அத்வானியும் அழகான ஒரு பொக்கேயை கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டார். இந்தியா – பாக் நாடுகளின் சண்டை வரலாற்றை கிண்டல் செய்யும் வண்ணம், ” இந்தியாவில் இறங்கிய பாக் குண்டு” என்று குறிப்பிட்டது, மும்பையின் மிரர் பத்திரிகை.

79 வயது வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தனது விலையுயர்ந்த டிசைனர் கோட்டு சூட்டுடன் பெருமையாக உலா வந்தாலும், ஹீனாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கப்பட்ட போதெல்லாம் அவரால் மற்றவர் கவனத்தை கவர்ந்திழுக்க முடியவில்லையாம். இப்படியாக ஹீனா ரப்பானி காரின் சௌந்தரிய புராண விளக்கத்தை இந்திய ஊடகங்கள் விதவிதமாக வருணித்து அதையும் தலைப்பு செய்தியாக வெளியிட்டிருக்கின்றன. பாக்கிற்கு எதிரான இந்திய வெத்துவேட்டு தேசபக்திக் கூச்சலை ஒரு இயக்கமாக பரப்புகின்ற டைம்ஸ் ஆப் இந்தியாதான் இந்த அலங்கார வருணணைகளை தொகுத்து அளித்திருக்கிறது! தேசபக்தி நாணயத்தின் மறுபக்கம் அள்ள அள்ளக் குறையாத ஜொள்ளு! இது நகை முரணல்ல, இயல்பான உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி!

தலைப்பை பார்த்து அடிக்க வந்துடாதீன்கள் மேலே உள்ள பத்திரிகை காரர்களுக்கு நாமும் என்ன இளைத்தவர்களா? அதனால்தான் இந்த தலைப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக