ஞாயிறு, 31 ஜூலை, 2011

மண்சோறு சாப்பிட்டால் குழந்தை பிறக்கும்!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கத்தில் பரதேசி ஆறுமுக சுவாமி கோயில் உள்ளது. இங்கு 175ம் ஆண்டு ஆடி குருபூஜை விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், உலக நன்மைக்காக சிறப்பு யாகபூஜை நடந்தது.


சுவாமிக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஏராளமான பக்தர்களின் நம்பிக்கையாகும். இதற்காக சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் நேற்று இக்கோயிலுக்கு வந்திருந்தனர்.

கோயிலில் சந்நியாசிகள் வழங்கும் பிரசாதத்தை பெண்கள் ஈரத்துணியுடன் மடியேந்தி பெற்றனர். பின்னர், அந்த பிரசாதத்தை குளக்கரையில் வைத்து, கைகளை பின்னால் கட்டிக்கொண்டு, மண்டியிட்டு மண்சோறு சாப்பிட்டனர்.

இதையடுத்து ஏற்கனவே குழந்தை வரம் வேண்டி வந்து வேண்டுதல் நிறைவேறிய நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் குழந்தையின் எடைக்கு, எடை நாணயங்கள் காணிக்கையாக செலுத்தினர். மேலும், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட காவடி ஊர்வலமும் நடந்தது.

தொடர்ந்து நடந்த அன்னதானத்தை எம்.பி., கிருஷ்ணசாமி துவக்கி வைத்தார். இதில் வட்டார காங்கிரஸ் தலைவர் அண்ணாமலை, மாவட்ட பொறுப்பாளர் முனிரத்தினம், மாவட்ட ஊராட்சிக்குழுமுன்னாள் தலைவர் நடராஜன், தொகுதி பொருளாளர் கவிதா அண்ணாமலை, முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மூட நம்பிக்கை: இந்த 21 நூற்றாண்டில் இப்படியும் ஒரு மூட நம்பிக்கையா? மண்சோறு தின்று அதன் மூலம் குழந்தை கிடைக்கும் என்றால் எதற்கு டாக்டர், எதற்கு மருந்துக்கள். இதை ஒரு எம்.பி தொடங்கி வைப்பது அதை விட வேடிக்கை. இவர்களை நம்பி நாட்டை ஒப்படைத்தால் நாடு உருப்பட்ட மாதிரிதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக