வியாழன், 4 பிப்ரவரி, 2010

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை மிரட்டும் சிவசேனை மொழி வெறியர்கள்.

லண்டன்: நான் வாபஸ் பெற வேண்டும் என்று சொல்பவர்களிடம் நான் கேட்கும் ஒரே கேள்வி- எதை வாபஸ் பெறச் சொல்கிறீர்கள்?, நான் இந்தியன் என்று சொன்னதையா? என்று கோபமாக கேட்டுள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான்.

பால்தாக்ரே மற்றும் சிவசேனை தீவிரவாதிகள் வெறி பிடித்த வேங்கை போல கைக்குக் கிடைத்தவர்களையெல்லாம் கடித்துக் குதறிக் கொண்டு இருக்கின்றனர். இப்போது ஷாருக் கானை குறி வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் தாக்கரே அன் கோவினர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல் போட்டிகளில் சேர்த்திருக்க வேண்டும் என்று சொன்னார் என்பதற்காக அவரை சரமாரியாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஷாருக் கான் நடித்த மை நேம் இஸ் கான் படத்தை மும்பையில் திரையிடக் கூடாது என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குப் பயந்து தியேட்டர்காரர்கள் பின்வாங்கத் தொடங்கியுள்ளனர். தனது பேச்சை வாபஸ் பெற வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தாக்கரேக்கள் ஷாருக் கானுக்கு கெடு விதித்துள்ளனர்.

இந்த நிலையில் லண்டனில் செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற ஷாருக் கான் மிகவும் உணர்ச்சிகரமாக பேசினார்.அவர் கூறுகையில், பாகிஸ்தான் வீரர்களுக்காக நான் பேசியதை வைத்து எனது தேசப்பற்று குறித்து சிவசேனாவினர் கேள்வி கேட்பது மிகவும் விரக்தியாக உள்ளது. கோபத்தை ஏற்படுத்துகிறது.

எதை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்கிறார்கள். நான் இந்தியன் என்று சொன்னதையா அல்லது எனது நாட்டுக்கு யாரும் வரக் கூடாது என்று சொல்லச் சொல்கிறார்களா?. எனது தந்தை இந்த தேசத்திற்காக போராடிய ஒரு சுதந்திரப் போராட்ட தியாகி. அவர் எனக்கு அப்படி எதையும் சொல்லித் தரவில்லையே.

எனது நாட்டில் நடைபெறும் ஒரு மிகப் பெரிய நிகழ்ச்சியைக் காணவும், அதில் பங்கேற்கவும் அனைத்து மக்களும் வர வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன். அதைத்தான் சொன்னேன். இந்தியா நமது நாடு, இந்தியர்கள் அனைவரும் நமது சகோதரர்கள் என்று 3ம் வகுப்பு முதலே பள்ளிக் கூடத்தில் நாம் அனைவரும் படித்தோம். நானும் படித்தேன். இன்றும் கூட அப்படித்தான் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். நான் மாஸ்டர் டிகிரி முடிக்கும் வரையிலும் கூட அப்படித்தான் புத்தகங்களில் இருந்தது. இதைத்தான் எனது ஆசிரியர்களும், பெற்றோர்களும், எனது தாயும் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்.

ஆனால் இன்று நடப்பவற்றைப் பார்த்தால் அவை எல்லாம் தவறு என்றுதான் நாம் சொல்ல வேண்டும்.உண்மையில் இப்போது என்ன பிரச்சினை என்றே புரியவில்லை. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே புரியவில்லை. நம் நாட்டுக்கு யார் வந்தாலும் திறந்த மனதுடன், இரு கைகளையும் கூப்பி வரவேற்பதுதானே நமது பண்பாடு என்று சொல்லிக் கொடுத்தனர்.

அது கலைத் துறையாக இருந்தாலும் சரி, கலாச்சாரம், விளையாட்டு, அரசியல், எந்தத் துறையாக இருந்தாலும் சரி, அப்படித்தானே சொல்லிக் கொடுத்தனர். அவையெல்லாம் தவறா?.இந்த நாட்டில் வசிக்கும் அனைவருக்கும், அவரவர் விருப்பபடி பேசும், செயல்படும் சுதந்திரம் உண்டு. அதனால்தான் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்த நாடு திகழ்கிறது.

ஆனால் நான் பேசியது எனது வர்த்தக பங்குதார்களை பாதிக்கிறது என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. நான் பேசியதால் எனது படத்திற்குப் பாதிப்பு வந்திருப்பது வருத்தம் தருகிறது.எனது கருத்தில் அவர்களுக்கு மாறுபாடு இருக்குமானால் அவர்கள் என்னைத் தாராளமாக அணுகலாமே, அதை விடுத்து படத்தைத் தடுப்போம் என்பது எப்படி சரியாகும்.

இந்தப் படத்தில் நான் மட்டும் இல்லையே. கஜோல் இருக்கிறார், கரண் (ஜோஹர்) இருக்கிறார். 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் உழைப்பும், அவர்களின் வாழ்க்கையும் கூட இருக்கிறதே. இந்த மிரட்டலுக்கு நான் நிச்சயம் பணிய மாட்டேன். என்னால் கரண் ஜோஹருக்கும், கஜோலுக்கும் ஏற்பட்டுள்ள சிரமத்திற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் தொடர்பான அனைத்து வர்த்தக பங்குதாரர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை நான் வேதனையுடன் பார்க்கிறேன் என்றார் ஷாருக். பிப்ரவரி 12ம் தேதி இப்படம் உலகெங்கும் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் தீவிரவாதி தாக்கரேக்கள் மூலம் மும்பையில் சிக்கல் வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக